தேசியத் தலைநகர் பகுதியில் (NCR) போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் தொடங்கப்பட்ட ‘மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு’ (RRTS), தற்போது இந்திய ரயில்வேயின் நவீன முகமாக மாறியுள்ளது. 2023 அக்டோபர் முதல் ‘நமோ பாரத்’ என்ற பெயரில் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில்கள், மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை. அதிநவீன சி.சி.டி.வி கேமராக்கள், அவசரகால கதவுகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வசதி எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ரயில்கள், டெல்லி – மீரட் இடையிலான பயண அனுபவத்தையே மாற்றியுள்ளன. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக அரசும் தனது பட்ஜெட்டில் சென்னை மற்றும் கோவை மண்டலங்களில் இத்தகைய அதிவேக ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என அறிவித்திருந்தது.
தற்போது, இந்தத் தொழில்நுட்பப் புரட்சியைத் தென் தமிழகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – சிவகாசி – ராஜபாளையம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 150 கி.மீ தூரத்திற்கு இந்த அதிவேக ரயில் பாதையை அமைக்க வேண்டும் என ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையின் பின்னணியில் மிக முக்கியமான பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக நூல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ராஜபாளையம், உள்நாட்டுத் துணி உற்பத்தியில் சிறந்து விளங்கும் தளவாய்புரம் மற்றும் மருத்துவத் துணி உற்பத்தியில் பெயர்பெற்ற சத்திரப்பட்டி ஆகிய பகுதிகள் இந்த வழித்தடத்தில்தான் உள்ளன.
மேலும், உலகப்புகழ் பெற்ற சிவகாசி பட்டாசுத் தொழில், திருமங்கலம் சிப்காட் வளாகம் மற்றும் விரைவில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை எனப் பொருளாதார ரீதியாக இந்த மண்டலம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. “வியாபாரம் மற்றும் தொழில் நிமித்தமாகத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்தத் தொழில் நகரங்களை அதிவேக ரயில் மூலம் இணைத்தால், தென் தமிழகத்தின் பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு நகரும்” என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கிடையே, சென்னை மற்றும் மதுரை இடையிலான பயண நேரத்தை வெறும் 4 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் நமோ பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், டெல்லியைப் போலவே தென் தமிழகத்தின் சாலை நெரிசல்கள் குறைந்து, அதிவேகப் பயணமே அன்றாட வாழ்வியலாக மாறும் என்பதில் ஐயமில்லை.
















