கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா ? – மனம் திறந்தார் முகமது ஷமி

தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தானோ ஓய்வு பெறப்போகிறேன் என்ற தகவல்களுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கும் ஷமி, கடந்த காலத்தில் பல முக்கியமான வெற்றிகளில் அணிக்கு தூணாக இருந்தார். காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய அவர், மீண்டும் வாய்ப்பு பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தாலும், பிசிசிஐ தேர்வில் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதையடுத்து, ஷமி ஓய்வு அறிவிக்கிறார் என்ற செய்தி பரவியது.

இந்த நிலையில், தனது ஓய்வு குறித்த வதந்திகளை தானே முறியடித்துள்ளார்.

முகமது ஷமி கூறியதாவது :
“யாருக்காவது பிரச்னை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் ஓய்வு பெற்றால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்றால் சொல்லுங்கள். எனக்கு சலிப்பு வரும் நாளில் தான் விலகுவேன். நீங்கள் என்னை சர்வதேச போட்டிகளில் தேர்வு செய்ய மாட்டீர்கள். ஆனால் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். விளையாடிக் கொண்டே இருப்பேன். அதற்கு இப்போது நேரமில்லை. 2027 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு கோப்பை வென்று தருவதே என் கனவு,” என அவர் தெரிவித்தார்.

34 வயதான ஷமி, 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை வரை தனது பயணத்தைத் தொடர விரும்புவதாக உறுதியாக கூறியுள்ளார். இருப்பினும், அத்தொடரில் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்பது கிரிக்கெட் வட்டாரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.

Exit mobile version