குள்ளப்பகவுண்டன்பட்டியில் காட்டு யானைகள் அட்டகாசம் அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை மற்றும் வாழை மரங்களைச் சூறையாடியுள்ள சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுருளியாறு வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தச் செழிப்பான விவசாய பூமியில், தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் வனப்பகுதி நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாடு காரணமாக, யானைகள் ஊருக்குள் நுழையும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சபரிமலை மண்டல காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் யானைகள் மேகமலை, வெண்ணியாறு மற்றும் சுருளியாறு வனப்பகுதிகளுக்கு இடையே அதிக அளவில் இடம் பெயர்வது வழக்கம். இந்த இடப்பெயர்வின் போது, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானைகள் விளைநிலங்களை வழித்தடங்களாக மாற்றிக் கொள்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்த போதிலும், அடர் வனப்பகுதிகளில் உள்ள சிற்றோடைகளில் போதிய நீர் சேமிப்பு இல்லாததால், யானைகள் தண்ணீருக்காகவும், ருசியான தென்னை, வாழை மரங்களுக்காகவும் தனியார் தோட்டங்களுக்குள் படையெடுக்கின்றன. நேற்று முன்தினம் இரவு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஒத்தக்களம் பகுதியில் புகுந்த யானைக் கூட்டம், அங்கிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களை வேரோடு சாய்த்தும், குருத்துகளைத் தின்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை தோட்டத்திற்கு வந்த விவசாயிகள், மரங்கள் சிதைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விளைநிலங்களில் உள்ள சிறு குடிசைகளில் தங்கிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் விவசாயிகள், யானைகளின் தொடர் ஊடுருவலால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “வனப்பகுதிக்கும் விவசாய நிலங்களுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள யானை அகழி (Elephant Proof Trench) தற்போது பல இடங்களில் மண்ணால் மூடிக்கிடக்கிறது. பெயரளவிற்கே இருக்கும் இந்த அகழிகளை யானைகள் மிக எளிதாகக் கடந்து வருகின்றன. வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, இந்த அகழிகளைப் போர்க்கால அடிப்படையில் ஆழப்படுத்த வேண்டும். மேலும், சூரியசக்தி மின்வேலிகளை (Solar Fencing) அமைத்து யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். வனத்துறையினர் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Exit mobile version