கேரளா மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி. (KDHP) நிறுவனத்திற்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட், சோலைமலை டிவிஷன் பகுதியில் காட்டு விலங்குகளுக்கு இடையே நடைபெற்ற அரிய வகை மோதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் காட்டின் வலிமையான வேட்டை விலங்காகக் கருதப்படும் சிறுத்தையை, எண்ணிக்கையில் அதிகமாக இருந்த செந்நாய் கூட்டம் ஒன்று பல மணி நேரம் சுற்றி வளைத்துத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கடந்த சில தினங்களாகவே மூணாறு எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், குடியிருப்புகளை ஒட்டியுள்ள சோலை வளைவுப் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை சுமார் 4:30 மணியளவில், நான்கு செந்நாய்கள் ஒரு சிறுத்தையை வழிமறித்துத் துரத்தத் தொடங்கின. செந்நாய்களின் ஒருங்கிணைந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுத்தை, சோலைமலைப் பாதையில் இருந்த அடர்ந்த புதருக்குள் புகுந்து தஞ்சம் புகுந்தது. எனினும், விடாத செந்நாய்கள் அந்தப் புதரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, சிறுத்தை வெளியே வராதபடி பல மணி நேரம் அங்கேயே காவல் நின்றன. வழக்கமாகச் செந்நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து பெரிய விலங்குகளை வேட்டையாடும் குணம் கொண்டவை என்பதால், இந்தச் சிறுத்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது.
சுமார் மூன்று மணி நேரமாக இந்தச் சிறைபிடிப்பு நீடித்ததைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர், உடனடியாக வனத்துறை அதிரடிப்படையினருக்குத் தகவல் அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “மாலை தொடங்கி இரவு வரை செந்நாய்கள் சிறுத்தையைச் சூழ்ந்து நின்றன. சிறுத்தைக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது செந்நாய்கள் அதைக் கொன்றுவிடுமோ என்று அஞ்சி வனத்துறையினரை அழைத்தேன்,” என்றார். தகவல் அறிந்து இரவு 7:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தொடர்ச்சியாகப் பட்டாசுகளை வெடித்துச் சத்தத்தை ஏற்படுத்தினர். பட்டாசு சத்தத்தால் மிரண்ட செந்நாய்கள் அங்கிருந்து ஓடியதைத் தொடர்ந்து, புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை மெல்ல வெளியேறி வனப்பகுதிக்குள் மறைந்தது. இந்தச் சம்பவத்தால் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் மீண்டும் வனவிலங்கு பீதி தொற்றிக்கொண்டுள்ளது.
