மதுரை மாவட்டம் பேரையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அறுவடைக்குத் தயாராக உள்ள பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்து வருகின்றன. இதனால் முதலீடு செய்த பணத்தைக்கூட எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பேரையூர் வட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி மற்றும் மக்காச்சோளத்தைப் பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் பெய்த தொடர் மழையினால் பயிர்கள் செழித்து வளர்ந்து, தற்போது நல்ல பலன் தரும் நிலையில் உள்ளன. ஆனால், விளைநிலங்களுக்கு அருகே உள்ள கண்மாய்கள் மற்றும் புதர்களில் பதுங்கியிருக்கும் காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாகப் புகுந்து பயிர்களைக் கிண்டி எறிந்து நாசம் செய்து வருகின்றன. ஒரு ஏக்கருக்குச் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், பன்றிகளின் தாக்குதலால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் என்றால், பகல் நேரங்களில் மான்களின் தொல்லை விவசாயிகளை வாட்டி வதைக்கிறது. கூட்டமாக வரும் மான்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து குருத்துப் பயிர்களை மேய்ந்து விடுவதால், பயிர்களின் வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க விவசாயிகள் வயல்களில் இரவு பகலாகக் காவல் காத்தும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு விளைநிலங்களுக்குள் புகும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுப் பிடிக்க அல்லது அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மான்களை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி, விவசாய நிலங்களுக்குப் பாதுகாப்பு வேலி அமைக்க உதவ வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் பேரையூர் பகுதியில் விவசாயத் தொழிலே கேள்விக்குறியாகி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
