திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி அருகே சொக்குபிள்ளைபட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (44). இவர் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி பழனியம்மாளும் (வயது 38), 9 மற்றும் 8 வயதுடைய இரண்டு மகன்களும் உள்ளனர். குழந்தைகள் தற்போது அணைப்பட்டியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனியம்மாளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அது திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாரியப்பன் பலமுறை மனைவியை கண்டித்து, “இரு குழந்தைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்க வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், பழனியம்மாள் உறவைத் தொடர்ந்து வந்ததால், குடும்பத்தை சிலுக்குவார்பட்டி அருகே எல்லைச்சாமிபுரத்திற்கு மாற்றியிருந்தார். அதுவும் பலனளிக்காத நிலையில், கணவனின் கடும் கண்டிப்பால் கோபமடைந்த பழனியம்மாள், தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டார்.
சம்பவத்தன்று இரவு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாரியப்பனை பழனியம்மாளும், அவரது காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்ததாகக் கூறி நாடகம் ஆட முயன்றாலும், உறவினர்கள் சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து, நிலக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். ஆனால், சம்பவத்துக்குப் பிறகு பழனியம்மாளும், அவரது காதலனும் தப்பி ஓடினர். தற்போது இருவரையும் பிடிக்க போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















