உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில், திருமணத்திற்கு புறம்பான உறவை கண்டித்த கணவரை, மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை, ஷாநவாஸ் (28) தனது மைத்துனரின் திருமணத்திற்கு, மனைவி மைஃப்ரீன் உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நான்கு இளைஞர்கள் வழிமறித்து, ஸை கட்டைகளால் தாக்கி, கத்தியால் பலமுறை குத்தினர். பின்னர் அவர்களில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
கடுமையாக காயமடைந்த ஷாநவாஸ், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஷாநவாஸின் மனைவி மைஃப்ரீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்ப விசாரணையில், திருமணத்திற்கு மொய் எழுத அவர் எடுத்துச் சென்ற ரூ.1.5 லட்சம் மற்றும் பைக் காணாமல் போனதால், போலீசார் இது கொள்ளைக்காக நடந்த கொலை என சந்தேகித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு அருகில் பைக் கிடைத்ததால், இது கொள்ளை அல்ல எனத் தெளிவானது.
தொடர்ந்த போலீஸ் விசாரணையில், மைஃப்ரீன் தசாவர் என்ற நபருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்தது தெரியவந்தது. தசாவர், ஷாநவாஸின் நெருங்கிய உறவினர் ஆவார். தனது மனைவி தசாவருடன் தொடர்பில் இருப்பதை ஷாநவாஸ் கண்டித்து வந்ததால், இருவரும் சேர்ந்து அவரைக் கொல்ல திட்டமிட்டனர். மேலும், மூன்று பேரின் உதவியுடன் இந்தக் கொலை நடைபெற்றது.
இந்த வழக்கில், தசாவர் மற்றும் மற்றொரு குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள மைஃப்ரீன் மற்றும் மீதமுள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.