தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான நிதி வழங்கல் விவகாரத்தில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், “மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றால், மாநில அரசு தனது நிதியிலிருந்தே தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், “2021-22ஆம் நிதியாண்டிலிருந்து இதுவரை மாநில அரசு 153 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வழங்க வேண்டிய 342 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதேபோன்ற நிதி விவகார வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு மற்றும் எதிர்மனுதாரரான ஈஸ்வரனுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் நோக்கில், கட்டாய கல்வி உரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி, தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இவ்வாண்டு சேர்க்கைகள் நடைபெறவில்லை என ஈஸ்வரன் என்ற நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
