சென்னை: தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் எவ்வளவு வந்துள்ளன என்பது குறித்து வெளிப்படையான அறிக்கையை வெளியிடாமல் இருப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது :
“ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்களும், முதலீட்டாளர் மாநாடுகளும் நடத்தப்பட்டதாகச் சொல்வது தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால், உண்மையில் தமிழகத்திற்கு எவ்வளவு வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதில் அரசு ஏன் தயங்குகிறது?
எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது?
எவ்வளவு முதலீடு கிடைத்துள்ளது?
எத்தனை புதிய தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன?
எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்?
என்பதைத் தெளிவாக தமிழக தொழில் துறை இணையதளம் அல்லது முதலீட்டு நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
ஆனால் அதற்கு பதிலாக, எக்ஸ் வலைத்தளத்தில் தொழில்துறை அமைச்சரும் முதல்வரும் வெற்று விளம்பரத்தில் மட்டும் ஈடுபடுவது, இந்த அரசு ‘பொய், பித்தலாட்ட அரசு’ என்பதை நிரூபிக்கிறது.
எனவே, உங்கள் ஆட்சியில் கையெழுத்தான 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலையை விவரிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இனியும் பொய்யான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்ற வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.















