“திமுகவில் இணைந்தது ஏன் ?” – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆர். சின்னசாமி விளக்கம்!

சென்னை:
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், கோவை சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். சின்னசாமி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது சேர்க்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

திமுக இணைப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சின்னசாமி, தன்னை திமுகவில் இணைத்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக காலத்தை நினைவு கூர்ந்து, தாம் அண்ணா தொழிற்சங்க பேரவையை 50 ஆயிரம் உறுப்பினர்களிலிருந்து 11 லட்சமாக வளர்த்ததாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக தலைமை சரியான திசையில் இயங்கவில்லை என்றும், உழைப்பவர்களுக்கு இடமில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தன்னைப் போன்ற கட்சி நலனுக்காக உழைக்கும் உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறினார்.

2018ம் ஆண்டில் அண்ணா தொழிற்சங்க நிதி முறைகேடு வழக்கில் சின்னசாமி கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டில் அவர் தொழிற்சங்க செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், அதிமுக தலைமைக்கு எதிராக நீதிமன்றத்திலும், பொதுவெளியிலும் கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்த பிறகு தற்போது திமுகவில் இணைந்திருக்கும் சின்னசாமி, ஸ்டாலின் அரசு பொதுமக்களிடம் நல்ல பெயர் பெற்றுள்ளதாகவும், மீண்டும் அவர் முதல்வராக வர தாம் இயன்ற ஆதரவை அளிப்பேன் என்றும் உறுதிப்படுத்தினார்.

தன்னின் இதுவரை உள்ள அரசியல் பயணத்தில் நடந்த மாற்றங்கள் குறித்து பேசும்போது, “மக்களை நம்பிக்கையுடன் நடத்தும் ஆட்சியோடு சேர வேண்டும் என்ற எண்ணத்திலேயே திமுகவை தேர்ந்தெடுத்தேன்” எனவும் சின்னசாமி தெரிவித்தார்.

இந்த இணைப்பு, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

Exit mobile version