“நாம் திமுக கூட்டணியில் இணைந்ததற்காக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், திமுகவும் ‘நீதிக்கட்சியில்’ இருந்து தோன்றியது. அதேபோல் எங்கள் கட்சியின் பெயரிலுமே ‘நீதி’ என்ற சொல்லே அடையாளமாக உள்ளது. ஆசியாவில் மையவாத கொள்கையை நிலைநிறுத்தும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான். நாடு இடது, வலது எனப் பிளவுபடக் கூடாது” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டங்கள் இன்று முதல் 21ஆம் தேதி வரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறுகின்றன. இந்த கூட்டங்களில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார் கமல்ஹாசன்.
இன்று காலை சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. மாலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுநாள் காலை நெல்லை, மாலை திருச்சி, மேலும் 21ஆம் தேதி விழுப்புரம், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் சந்திப்பு நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைகளில், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம், கட்சியின் வலிமை எவ்வாறு உள்ளது, மேலும் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதையும் கமல்ஹாசன் விவாதித்து வருகிறார்.