தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளர் தேர்வு மற்றும் விருப்பமனு தாக்கல் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகர் மாவட்டத்தின் முக்கிய பெண் முகமாக உருவெடுத்துள்ள கே.கே.நகர் பகுதி திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் க.ஜெயஸ்ரீ கணேசநாச்சியார், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார்.
மதுரை அரசியலில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் இவர், தென் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளார். மதுரையின் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் பொறியாளராகத் தனது பங்களிப்பை வழங்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விருப்பமனுத் தாக்கலின் போது, முன்னாள் வேளாண் விற்பனைக்குழு வாரிய தலைவரும், தற்போதைய திமுக மாநில தீர்மானக்குழு செயலாளருமான அக்ரி கணேசன் உடனிருந்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகளின் வழிகாட்டுதலோடு, மதுரையில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப்போவதாக ஜெயஸ்ரீ கணேசநாச்சியார் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரையில் நிலவும் அரசியல் சூழலில், படித்த மற்றும் துடிப்புள்ள பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கக் கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த விருப்பமனுத் தாக்கல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பொறியாளர் அணி நிர்வாகியாக இருந்து கொண்டு தேர்தல் களத்தில் இறங்கத் தயாராகியுள்ள ஜெயஸ்ரீ கணேசநாச்சியாருக்கு அப்பகுதி உடன்பிறப்புகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

















