இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 சதங்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்தது.
முதல் போட்டியில் வெற்றியடைந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே அணியையே அறிவித்தது. இதன் மாறாக, இந்திய அணி பர்மிங்காமில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 3 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியது. அதன்படி, பும்ரா, சாய் சுதர்சன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்பட்டனர்.
பும்ரா நீக்கப்பட்ட இடத்தில் ஆகாஷ் தீப் இடம்பெற்றார். சாய் சுதர்சன் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த மாற்றங்கள் ரசிகர்களை மட்டுமல்லாது, முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. பும்ராவுக்கு ஏற்கனவே 7 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், அவரை மீண்டும் அணியில் சேர்க்காதது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி,
இந்திய அணி தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வெற்றிப் பாதைக்கு திரும்புவது அவசியம். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அணியில் இருந்து விலக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு ஏற்கனவே ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போட்டி மிக முக்கியமானது என்பதால், பும்ரா, மற்றவர்களை விட ஆடவேண்டியவர்.”
மேலும்,
அணியில் யார் விளையாட வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் வீரருக்கு இருக்கக்கூடாது. அந்த முடிவுகளை கேப்டனும் தலைமை பயிற்சியாளருமே எடுக்க வேண்டும்,” என கடுமையாக விமர்சித்துள்ளார்.