10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் பா.ஜ.க.,வின் கண்கள் எங்கே போயின? செந்தில் பாலாஜி கடும் தாக்கு!

கோவையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், சுமார் 6.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து முறையான ஆய்வு அவசியம் என்றார். குறிப்பாக, தற்போதைய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த நீக்கப்பட்ட பெயர்களை ‘தி.மு.க.வின் கள்ள ஓட்டுகள்’ என்று விமர்சிப்பதற்குப் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி, “பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கள்ள ஓட்டுகள் ஏன் பா.ஜ.க.வின் கண்ணுக்குத் தெரியவில்லை? அப்போது அவை நல்ல ஓட்டுகளாகத் தெரிந்தனவா? இப்போது மட்டும் கள்ள ஓட்டுகளாகத் தெரிவது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளைச் சாடிய அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார். தமிழகத்தின் முக்கியத் திட்டங்களான மெட்ரோ ரயில் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியில் பா.ஜ.க.வுக்குத் துளியும் அக்கறையில்லை என்றும் அவர் சாடினார். தமிழக நலனைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசு, தற்போது தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியான வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயல்வதாகவும், இதற்கு அ.தி.மு.க. துணை நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்வதே தனது இலக்கு என்று முழங்கினார். கடந்த 2021 தேர்தலில் கோவையில் தி.மு.க. சந்தித்த பின்னடைவைத் தற்போதைய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் சரிசெய்து, அனைத்து இடங்களிலும் ‘உதயசூரியன்’ சின்னத்தை வெற்றி பெறச் செய்வேன் என்று உறுதியளித்தார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், “கரூரில் ஐந்து முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற எனக்கு அந்த மண்ணுடனும் மக்களுடனும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. எனவே, நான் கரூரை விட்டு வேறு தொகுதிக்குச் செல்லும் எண்ணம் துளியும் இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

பல்லடத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. மகளிரணி மாநாட்டிற்குக் கோவையிலிருந்து சுமார் 50,000 பெண்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தற்போதைய முக்கியப் பணி என்றார். தி.மு.க.வின் தேர்தல் வெற்றியைத் தடுக்க நினைக்கும் சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மீண்டும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை நிலைநிறுத்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version