சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி வழங்கிய நிலையில், அந்தத் தீர்ப்பை தர்கா நிர்வாகம் எதிர்க்காமல் அமைதியாக இருந்தபோது, கோயில் செயல் அலுவலர் மட்டும் மேல்முறையீடு செய்தது சந்தேகத்திற்கு உரியது என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
சென்னை தி.நகரில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமயத்திற்குச் சொந்தமான பகுதி. சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு மற்றும் தர்காவிற்கு செல்லும் பாதை ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கான உரிமை உள்ளது. இதை 2014, 2017 தீர்ப்புகள் தெளிவாக குறிப்பிடுகின்றன. ஆனால் அமைச்சர் ரகுபதி உண்மையை மாற்றி பேசுகிறார்,” என்றார்.
தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி ராமரவி குமார் டிசம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தை அணுகியபோது, மதுரை கிளை நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
“அந்தத் தீர்ப்பில் உண்மையான குறை இருந்திருந்தால், தர்கா நிர்வாகமே மேல்முறையீடு செய்ய வேண்டியது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் மனம் புண்படுகிறது எனக் கூற வேண்டியதும் அவர்கள். ஆனால் கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்கான பொறுப்பு இருந்தும், கோயில் EO தான் மேல்முறையீடு செய்தார். இது திமுக அரசின் அழுத்தத்தால் நடந்த செயல்,” என அவர் கூறினார்.
மேலும், திமுக அரசு அந்தப் பகுதியை ‘சிக்கந்தர் மலை’ என அரசு ஆவணங்களில் குறிப்பிடும் போதும், ராமநாதபுரம் எம்.பி. அங்கு சென்றபோது நடந்த விவகாரங்களில் அரசு அமைதியாக இருந்ததையும் அவர் விமர்சித்தார்.
“எம்.பி. அங்கு சென்று சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது அரசு எதுவும் சொல்லவில்லை. பக்தர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு விதித்து, நயினார் நாகேந்திரன் மற்றும் எச்.ராஜாவை கைது செய்ததற்கு எந்த காரணமும் இல்லை,” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
