“எடப்பாடிக்கு என்ன தெரியும் ? செல்வபெருந்தகை மேட்டரை அப்புறமா பேசலாம் !” – அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோயம்பேடு சந்தைக்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகிறார்கள். பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இது இரு மடங்கு அதிகரிக்கிறது. மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.40 கோடி செலவில் 4 மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 70% பணிகள் நிறைவடைந்துள்ளன. டிசம்பர் மாதத்திற்கு முன் அனைத்து பணிகளும் முடிவடையும்,” என தெரிவித்தார்.

சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மாநகராட்சி உடனடியாக சரிசெய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அதே சமயம், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அந்த விஷயத்தை அப்புறம் பேசலாம்” எனத் தவிர்த்தார்.

இதேவேளை, “மழை காலத்தில் திமுக ஆட்சியை நம்பி எந்த பயனும் இல்லை; எதிர்க்கட்சியே செயல்பட வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “ஆளும் கட்சியாக இருந்த போது அவர் என்ன சாதனை செய்தார் என்பதை மக்கள் பார்த்தார்கள். கொரோனா காலத்தில் உயிர் பயந்து அனைவரும் வீட்டில் இருந்தபோது, களத்தில் இருந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வெள்ள நிவாரண பணிகள் குறித்து பேசுவதற்கு ஈபிஎஸ்க்கு எந்த அருகதையும் இல்லை,” என்று கடுமையாக பதிலளித்தார்.

Exit mobile version