மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் டிஎஸ்பியாக செயல்பட்டு வரும் சுந்தரேசன் மீது, பணிக்காலத்தில் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதவியேற்ற டிஎஸ்பி சுந்தரேசன், சட்டவிரோத சாராய விற்பனை மற்றும் மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், 1200க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 700 பேர் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொடர்ச்சியான சாராயக் கடத்தலில் ஈடுபட்ட 5 பேருக்கு எதிராக குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.
இவ்வாறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் டிஎஸ்பி சுந்தரேசன் மீது, அவரது பணிப்பழக்கங்கள் தொடர்பாக முன்னதாகவே நிர்வாகத்தினால் எச்சரிக்கை, பதிவான குற்றப்பத்திரிகைகள், சம்பள உயர்வு தடை போன்ற பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இது, காவல் துறையின் உள்நிலை நடவடிக்கைகள் தொடர்பாக அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.