கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.,வின் “மக்களை தேடி மக்கள் தலைவர்” என்ற கேப்டன் யாத்திரை நடைபெற்றது.
அதன்போது, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டியில்,
“ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க., மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரமணியின் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து சென்றார்” என்றார்.
வீரமணியுடன் நடந்த சந்திப்பு விவரங்களைப் பிரேமலதா வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், அதில் கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவே தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிட்டது. விருதுநகரில் மட்டும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூடுதல் வாக்குகள் பெற்றார். பல இடங்களில் வேட்பாளர்கள் டிபாசிட் தொகையை இழந்தனர். இதனால், அ.தி.மு.க.,விடம் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்த பிரேமலதா, அதற்கு முன்பு தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பழனிசாமியிடம் கேட்டும் அது நடைபெறவில்லை.
இதனால் அ.தி.மு.க., தலைமை மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா, சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இல்லம் தேடிச் சென்று சந்தித்தார். உடல்நலம் விசாரிப்பதோடு, இரு தரப்பினரும் கூட்டணி குறித்தும் ஆலோசித்துள்ளனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தேர்தல் நெருங்கும் நிலையில் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தே.மு.தி.க.,வை மீண்டும் அ.தி.மு.க., கூட்டணிக்கு சேர்க்க வேண்டும் என விரும்பும் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வீரமணியை அனுப்பி பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னார்.
அதன்படி, திருப்பத்தூரில் தங்கியிருந்த பிரேமலதாவை சந்தித்த வீரமணியிடம்,
“அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும் என்றால், தே.மு.தி.க.,வுக்கு குறைந்தபட்சம் 30 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான செலவையும் அ.தி.மு.க., ஏற்க வேண்டும். நாங்கள் கேட்கும் தொகுதிகளை முழுமையாக வழங்க வேண்டும்” என பல்வேறு நிபந்தனைகளை பிரேமலதா முன்வைத்தார்.
“இந்த நிபந்தனைகளை பழனிசாமியிடம் தெரிவிக்கிறேன்; அவர் ஒப்புக்கொண்டால், அடுத்த கட்ட பேச்சு நடக்கலாம்” என்று கூறி வீரமணி புறப்பட்டுச் சென்றார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.