பாரீஸ் :
பிரான்ஸ் முழுவதும் “அனைத்தையும் தடுப்போம்” (Block Everything) என்ற முழக்கத்துடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முந்தைய பிரதமர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள், பொது விடுமுறை குறைப்புகள், ஓய்வூதியங்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதனால் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேய்ரூ தோல்வியடைந்து பதவி விலகினார். அதன்பின் அதிபர் இம்மானுவல் மேக்ரான், தனது ஆதரவாளர் செபாஸ்டியன் லெகார்னுவை புதிய பிரதமராக அறிவித்தார்.
ஆனால், லெகார்னுவின் நியமனத்தால் சமத்துவமின்மை குறையாது எனக் கூறிய மக்கள், ஏற்கனவே சமூக ஊடகங்களில் பரவி வந்த “அனைத்தையும் தடுப்போம்” பிரச்சாரத்தில் ஈடுபட்டு பாரீஸ் நகரில் திரண்டனர். போராட்டத்தின் போது சாலைகளை மறித்து, தீ வைத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தை கட்டுப்படுத்த 80,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் கற்கள் எறிந்து போலீசாரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புரூனோ ரெட்டைல்லோ தெரிவித்துள்ளார் :
“ரென்னெஸ் நகரில் போராட்டக்காரர்கள் பேருந்தொன்றுக்கு தீ வைத்துள்ளனர். மின்சார கம்பிகளை சேதப்படுத்தியதால் தென்மேற்கு பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது” என்றார்.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி ஆட்சியை கவிழ்த்த நிலையில், பிரான்சிலும் மக்கள் தன்னெழுச்சியாக சாலைகளில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.