மத்திய அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதும், முந்தைய அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரத்து செய்வதும் என திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பயனாளிகளின் பெயர் நீக்கம் குறித்துப் பெரும் விவாதம் நடந்து வருகிறது. மத்திய அரசு இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோது 150 நாட்களாக உயர்த்துவோம், ஊதியத்தை உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், இன்று சம்பளத்தைக் கூடச் சரியாக வழங்கவில்லை. 100 நாள் வேலை என்பது இன்று வெறும் 10 நாட்களாகச் சுருங்கிப் போய்விட்டது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த நிலையை மறைக்க, ஸ்டாலின் பச்சைத் துண்டு அணிந்து கொண்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்து வருகிறார்.”
“மத்திய அரசு திட்டங்களின் பெயர் மாற்றத்திற்காகப் போராட்டம் நடத்தும் ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த உன்னதமான திட்டங்களை ஏன் ரத்து செய்தார்? தாலிக்குத் தங்கம், அம்மா மடிக்கணினி, குடிமராமத்து போன்ற திட்டங்களை முடக்கியது ஏன்? 2,000 அம்மா மினி கிளினிக்குகளுக்குப் பூட்டு போட்டீர்கள்; அம்மா உணவகங்களைச் சின்னாபின்னமாக்கினீர்கள். பெயர் மாற்றத்திற்காகக் கொந்தளிக்கும் நீங்கள், மக்களின் பயன்பாட்டிலிருந்த திட்டங்களையே மூடிவிட்டீர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு எதை அறிவித்தாலும் அதை எதிர்ப்பது என்ற ஒற்றை நோக்கத்தில் திமுக செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், “தொகுதி வரையறை விவகாரத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பினீர்கள். எஸ்.ஐ.ஆர். (SIR) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றம் வரை சென்று கொட்டு வாங்கி வந்தீர்கள். உங்களின் இத்தகைய மோதல் போக்கினால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு என்றாலும் நிறைவேற்ற மறுப்பதுதான் இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது” என்று சாடினார்.
“ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது மீண்டும் மடிக்கணினி தருவேன் எனப் பொய் பேசுகிறார்கள். திமுகவின் இந்தப் பச்சைத் துரோகத்தைத் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெறும் 45 வார திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் திமுகவின் இந்த இரட்டை வேடத்தை மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டுவோம். தமிழகத்தை திமுகவின் கோரப்பிடியிலிருந்து விடுவித்து, எடப்பாடியார் தலைமையில் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்” என ஆர்.பி. உதயகுமார் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

















