விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
“ஜி.எஸ்.டி. வரியை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அது தேர்தல் நோக்கத்திற்காக வந்திருந்தாலும் பாராட்டத்தக்கது. ஆனால், ஜி.எஸ்.டி. முறையை முழுமையாக கைவிட வேண்டும். பிரதமர் மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு. அவர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்.ஐ பாராட்டியது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல,” என்றார்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசிய அவர்,
“தங்கள் உரிமைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்ததே தேவையற்றது. போராட்டம் துவங்கிய நான்காவது நாளில் நான் அவர்களை சந்தித்துப் பேசியிருந்தேன். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நேரு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்தித்து விவாதித்தேன்.
ஆனால், இந்த உண்மையை புறக்கணித்து எங்களை விமர்சிப்பது வேடிக்கையானது. தூய்மைப் பணியாளர் பிரச்சினையை தீர்க்காமல், தி.மு.க. கூட்டணியை உடைக்க முடிகிறதா என்பதே சிலரின் நோக்கம் போல உள்ளது,” என்றார்.
அ.தி.மு.க. மீது விமர்சனம் செய்த அவர்,
“தூய்மைப் பணியாளர்களுக்காக அ.தி.மு.க. ஏன் போராட்டம் நடத்தவில்லை? கைது செய்யப்பட்ட பிறகு தான் பழனிசாமி பேசியிருக்கிறார். தூய்மைப் பணியை தனியார்மயமாக்கியது அ.தி.மு.க. ஆட்சியில்தான். அதை பற்றி இப்போது போராட்டக்காரர்கள் ஏன் மவுனம் காக்கிறார்கள்? அ.தி.மு.க. செய்தால் அமைதியாக இருக்க வேண்டும், தி.மு.க. செய்தால் எதிர்க்க வேண்டும் என்ற அரசியல் தவறானது,” என்று கூறினார்.
“தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் நான் அமைதியாக இருப்பேன் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், தூய்மைப் பணியாளர்களுக்காக நாங்கள்தான் குரல் கொடுத்து வருகிறோம். அரசின் முரட்டுத்தனத்திற்கு எதிராக உறுதியாக நிற்போம்,” என திருமாவளவன் வலியுறுத்தினார்.