இம்பால்: இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலையை உறுதி செய்து, வளர்ச்சியை வேகமாக்குவது தான் மத்திய அரசின் முதன்மை குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று மணிப்பூர் மாநிலத்தின் சுரசந்த்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர், ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் உரையாற்றிய அவர்,
“மணிப்பூர் தைரியம் மற்றும் துணிச்சலின் பூமி. இங்குள்ள மக்களின் ஆர்வமும் உழைப்பும் பாராட்டத்தக்கது. மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மணிப்பூர் மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. அமைதிக்காக மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள், மலை மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள மக்களிடையே நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கின்றன. மாநிலத்தை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். அதற்கான ஆதரவை நான் எப்போதும் வழங்குவேன்,” என்றார்.
மேலும், வளர்ச்சிக்கான அடிப்படை ‘அமைதி’ என்பதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “மணிப்பூர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் அமைதி பாதையில் செல்ல வேண்டும். மாநிலத்தின் ரயில்வே மற்றும் சாலை இணைப்புக்கான பட்ஜெட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது,” எனவும் தெரிவித்தார்.