தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர், “வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக இன்னும் இரண்டு மாதங்களில் பாமக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். அதில் ஐந்து லட்சம் பாமகவினர் பங்கேற்க வேண்டும். இளைஞர்கள் எண்ணினால் புரட்சி நிச்சயம் வெடிக்கும். நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இளைஞர்களின் எழுச்சியால் ஆட்சிமாற்றம் நடந்தது போல தமிழகத்திலும் மாற்றம் வரும்,” எனக் கூறினார்.
மேலும், கடலூரில் உள்ள விவசாய நிலங்களை பாழாக்கிவருவதாக அன்புமணி ராமதாஸ் NLC நிறுவனத்தை கடுமையாக விமர்சித்தார். “முன்பு கடலூரில் சில அடிகள் தோண்டினாலே தண்ணீர் கிடைத்தது. ஆனால் இப்போது 700-800 அடிக்குத் தான் நீர் கிடைக்கிறது. எதிர்கால தலைமுறையை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது,” என்றார்.
திமுக அரசை குறிவைத்து அவர், “முதல்வர் மக்கள் வரிப் பணத்தில் வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுகிறார். வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்துவந்தாலே போதும், அதற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. டையும் கோட்டும் அணிந்த யாரும் கையெழுத்துப் போடலாம். ஆட்சி முடிவதற்கு இன்னும் நான்கரை மாதங்களே உள்ளன. முதலீடு எதுவும் வரப்போவதில்லை,” என்று விமர்சித்தார்.