விருதுநகர் : 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில அளவில் பூத் கமிட்டி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சாலை அருகே நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்பாராத அளவில் பாஜகவின் சொந்த தொண்டரிடமிருந்தே ஷாக் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
நயினார் நாகேந்திரன் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்த வேளையில், பல்வேறு கட்சியினர் அவரைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஒரு பாஜக தொண்டர் நேரடியாக நயினாரை சந்தித்து, “ஐயா… உங்களுக்கு சோறு கூட போடுறோம்… ஆனா ஓட்டு போட மாட்டோம் என மக்கள் சொல்றாங்க” என வெகுளியாக தெரிவித்தார்.
இந்தக் கருத்து கேட்ட நயினார் நாகேந்திரன் சற்று திகைத்த முகத்துடன், புன்னகையோடும், அமைதியோடும் அந்த தொண்டரிடம் பதிலளிக்க முயன்றார். ஆனால் உடனே பக்கத்தில் நின்றிருந்த பாஜக நிர்வாகி ஒருவர் அந்த தொண்டரின் பேச்சை கட்டுப்படுத்தி, “அதை பிறகு பேசிக்கொள்ளலாம்” என சமாதானமாகக் கூறி அவரை அப்புறப்படுத்தினார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும், “தொண்டர்களின் நிலைமையே இப்படியானால், பொதுமக்கள் நிலைமை என்ன இருக்கும்?” என விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.