அதிமுக மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் உச்சத்துக்கு சென்றது. அவர்களின் புண்ணியத்தால் நாடளாவிய அளவில் அங்கீகாரம் பெற்றது. இத்தகைய பெரும் இயக்கத்தில் மூத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அறிவார்ந்ததல்ல, சிறுபிள்ளைத்தனமானது. இது கட்சிக்கும் நன்மை அளிக்காது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கட்சியில் பிளவுகள் ஏற்பட்டாலும், ஒன்றுபட்டு செயல்பட்டதால்தான் முன்னேற்றம் சாத்தியமானது. எம்.ஜி.ஆரிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் – யாரையும் பிரித்து பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்துவது. திமுகவைக் பலவீனப்படுத்துவதே நமது குறிக்கோள். ஆனால், நாம் பிளவுபட்டால், அவர்களுக்கே இடம் கொடுத்துவிட்டதாகி விடும்,” என சசிகலா எச்சரித்துள்ளார்.
செங்கோட்டையனின் நல்லெண்ணத்தைக் கட்சி நிர்வாகிகள் சிந்திக்க வேண்டும் என்றும், தொண்டர்கள் எண்ணங்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிமாற்றம் அவசியம். அதற்கான ஒரே தீர்வு ஒன்றுபட்ட அதிமுக தான். அனைவரும் ஒன்றுபட்டு திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும்,” என சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.