அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது மனிதாபிமான கடமை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர், டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தலைவர்களும் இந்தியா-சிங்கப்பூர் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிகழ்வில், இந்தியா–சிங்கப்பூர் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் இரு பிரதமர்களும் நிருபர்களை சந்தித்து கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
“பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களை நான் மனமார்ந்த வரவேற்பு அளிக்கிறேன்.
இந்தியா-சிங்கப்பூர் உறவுகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில், இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக உறவை கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது அனைத்து நாடுகளின் மனிதாபிமான கடமை என நாங்கள் நம்புகிறோம். இந்திய மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை ஆதரித்ததற்காக பிரதமர் வோங் மற்றும் சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
எங்கள் உறவுகள் தூதரக மட்டத்திற்கு அப்பாற்பட்டவை. கப்பல் போக்குவரத்து, அணுசக்தி, நகர்ப்புற நீர் மேலாண்மை போன்ற துறைகளிலும் இரு நாடுகள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.”* என அவர் தெரிவித்தார்.