தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே நடைபெற்ற அதிமுக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால் கூட்டணிகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம். புதிய கட்சிகள் சேரக்கூடும், தற்போதைய கூட்டணிகள் கூட பிரியலாம். ஆனால் அதிமுக மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கும் கட்சியாகும்” என்று கூறினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 7 முதல் மக்கள் தொடர்பு பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது 154ஆவது நாளாக அது நீலகிரி மாவட்டத்தில் நிறைவு பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். “மக்கள் எடப்பாடி பழனிச்சாமியையே அடுத்த முதலமைச்சராக முடிவு செய்து விட்டனர். திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே யார் எதிர்க்கட்சியாக வருவார்கள் என்பது தான் போட்டி” என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் குறித்து பேசும் போது, “காங்கிரஸ் கட்சியை திமுக படிப்படியாக விழுங்கி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் அதற்கான எச்சரிக்கையை உணர வேண்டும். மேலும், ஒரு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் படுகொலைக்கான குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், அந்தக் கட்சி திமுக தவறுகளை சுட்டிக்காட்டாதது வருத்தமளிக்கிறது” என்றார்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும் எனவும், அதிமுக ஆட்சியின் நன்மையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர் எனவும் அவர் வலியுறுத்தினார்.