காஞ்சிபுரம் :
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் பலர், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிணைவு குறித்து நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர்.
அதிமுக ஒருமிப்பு குறித்து பேசும் போது, வைத்திலிங்கம் கூறியதாவது:
“அதிமுக ஒன்று சேர வேண்டும் என்ற ஆதங்கம் அனைவரிடமும் உள்ளது. ஒன்று சேர்ந்தாலே அனைவருக்கும் வாழ்வு உண்டு; இல்லையெனில் கட்சி முழுவதுமாக அழிந்து விடும். கட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமைத்த விதிகள் அனைவரும் அறிந்தவை. கட்சியின் அனைத்து தொண்டர்களும் ஓட்டு செலுத்தி பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவரது கொள்கை.”
“ஆனால் பழனிசாமி, பத்து மாவட்டச் செயலர்கள் முன்மொழிந்தால் பொதுக்குழு வாயிலாக பொதுச்செயலரை தேர்வு செய்யலாம் என விதிகளை மாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர். வகுத்த சட்டத்தை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. பழனிசாமி, சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை,” என்றார்.
மேலும், உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ரஞ்சித் குமார் பேசுகையில்,
“நாங்கள் எவ்வளவோ போராடி விட்டோம். இப்போது, உங்கள் காலில் விழ வேண்டும் என்றால், அதையும் செய்கிறோம். எங்களையும் சேர்த்துக் கொண்டு கட்சியை ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், 2026ம் ஆண்டு மூன்று எழுத்துக் கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும்!” என்று எச்சரிக்கை விடுத்தார்.