திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாலாறு – பொருந்தலாறு அணை, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. 65 அடி மொத்த நீர்மட்டம் கொண்ட இந்த அணையில், தற்போதைய நிலவரப்படி 56.76 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 75 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், பாசனப் பணிகளுக்காக அணையைத் திறக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு, அணை மற்றும் கால்வாய் பகுதிகளில் மலர்களைத் தூவி பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைத்தனர்.
இந்தத் தண்ணீர் திறப்பு மூலம் பழனி மற்றும் பாலசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 844 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறவுள்ளன. விநாடிக்கு 20 கன அடி வீதம், மொத்தம் 120 நாட்களுக்கு 207.36 மில்லியன் கன அடி நீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் மற்றும் அணை உதவி பொறியாளர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். சரியான பருவத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் நெல் மற்றும் இதர பயிர்களின் சாகுபடிப் பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரைப் சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
















