திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், திருவள்ளூரில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு, பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 4,500 கனஅடியில் இருந்து 6,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, பூண்டி ஏரி – மொத்த கொள்ளளவின் 76% நீர் நிரம்பியுள்ளது. விநாடிக்கு 6,970 கனஅடி நீர் வரத்து பதிவாக, 6,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரி – 82% நீர் நிரம்பியுள்ள நிலையில், 432 கனஅடி நீர் வரத்து, 709 கனஅடி நீர் வெளியேற்றம் நடைபெற்று வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி – 80% நீர் நிரம்பியுள்ள நிலையில், 1,196 கனஅடி நீர் வரத்து, 945 கனஅடி வெளியேற்றம்.
தேர்வாய் கண்டிகை ஏரி – 87% நீர் நிரம்பியுள்ளது; விநாடிக்கு 50 கனஅடி நீர் வரத்து.
சோழவரம் ஏரி – 55% நீர் மட்டுமே தேங்கி உள்ளது; விநாடிக்கு 830 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ளது.
மழை தொடர்ந்து பெய்தால், நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
			














