கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள அதிரப்பள்ளி அருவி, தென்னிந்தியாவின் ‘நயாகரா’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். சாலக்குடி – வால்பாறை பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த அருவிக்குத் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது வடகிழக்குப் பருவமழைக்குப் பிந்தைய குளு குளு சீசன் தொடங்கியுள்ளதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால், கடந்த சில தினங்களாக அருவியில் நீர்வரத்து மிகக் குறைவாக உள்ளதால், பெரும் எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்து குறைபாட்டிற்கான முக்கியக் காரணம் குறித்து வனத்துறையினர் விளக்குகையில், அதிரப்பள்ளி அருவியின் நீர் ஆதாரமானது மின் உற்பத்தியோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. அருவிக்கு அருகே உள்ள பெரிங்கல்குத்து மின் உற்பத்தி நிலையத்தில் (Peringalkuthu Hydroelectric Project) மின் தேவைக்காகத் தொடர்ந்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, மாலை நேரங்களில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருப்பதால், மாலை முதல் அதிகாலை வரை மின் உற்பத்திக்காகத் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுகிறது. அந்த நீர் அதிரப்பள்ளி அருவி வழியாகப் பாய்ந்து செல்கிறது. ஆனால், பகல் நேரங்களில் மின் உற்பத்தித் தேவை குறைவாக இருப்பதால், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பார்வையிட வரும் பகல் நேரங்களில், பாறைகள் மட்டுமே தென்படும் அளவிற்கு நீர்வரத்து மெலிந்து காணப்படுகிறது. அருவியின் பிரம்மாண்டமான ஆர்ப்பரிப்பைக் கண்டு ரசிக்க முடியாமலும், பாதுகாப்பான இடங்களில் குளிக்க முடியாமலும் பயணிகள் தவிக்கின்றனர். அதிரப்பள்ளி செல்லும் வழியில் உள்ள வழச்சல் அருவியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது. “வெகுதூரத்தில் இருந்து அதிக செலவு செய்து குடும்பத்துடன் அருவியைப் பார்க்க வந்தோம்; ஆனால் நீர்வரத்து இல்லாமல் பாறைகளாகத் தெரிவது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது” எனச் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பகல் நேரங்களிலும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரையாவது அருவியில் திறந்து விடக் கேரள மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
















