தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடுகள் ஏற்பட்டதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், திமுகவினர் வாக்குச் சாவடி அதிகாரிகளாக இருந்து, ஆளுங்கட்சிக்கு சாதகமாக 13 ஆயிரம் அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டது.
மனுதாரர், “1998-ஆம் ஆண்டில் தி.நகர் தொகுதியில் 2,08,349 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் 2021-ஆம் ஆண்டில் வெறும் 36,656 பேர் மட்டுமே அதிகரித்துள்ளனர். மக்கள் தொகை கணக்கை விட வாக்காளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை முழுமையாக மீளாய்வு செய்து, தவறான சேர்க்கை மற்றும் நீக்கங்களை சரி செய்து இறுதி பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், “நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீஹாரைப் போன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. அந்த நேரத்தில் மனுதாரர் தெரிவித்த புகார்கள் பரிசீலிக்கப்படும்” என தகவல் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து, பீஹாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சார்ந்த உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
 
			

















