புதுடில்லி : வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை, நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மால்யா பாக்சி அமர்வில் இன்று நடைபெற்றது.
இந்த மனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கும்போது,
ஆதார் அட்டை ஒரு குடியுரிமை ஆவணமாகக் கருதப்பட முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு செயல்முறை. குடியுரிமை தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க உள்துறை அமைச்சகமே பொறுப்பாக உள்ளது. பீகாரில் நடைபெறும் பட்டியல் திருத்தமும் சரியானது. இது தேர்தல் நடத்தும் நடவடிக்கையுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை,” எனத் தெரிவித்தது.
இதையடுத்து, நீதிபதிகள் சில முக்கியமான கேள்விகளை எழுப்பினர் :
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்?
தேர்தல் இல்லாத காலங்களில் இந்த திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமே?
குறுகிய கால அவகாசத்தில் பட்டியல் திருத்தத்தை தீவிரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன?
குடியுரிமை தொடர்பாக நடவடிக்கை எடுக்க Election Commission தாமதம் செய்ததா?
மேலும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.