திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நத்தம் ரவுண்டானா அருகே மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) ஆனது 04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெற உள்ளது.
மேற்கண்ட பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு உரிய விழிப்புணர்வு (SVEEP – Systematic Voters’ Education and Electoral Participation) ஏற்படுத்தும் பொருட்டே இந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரவுண்டானா அருகே விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நத்தம் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த மனிதச் சங்கிலியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் கைகளைக் கோர்த்தபடி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் முக்கியத்துவத்தையும், மக்கள் தங்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு வலியுறுத்தியது.
