மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார மலை அடிவாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல நூறு ஏக்கர் மாந்தோப்புகளில், தற்போது பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் தரமான மாம்பழங்கள் அருகிலுள்ள முடுவார்பட்டி சந்தை மட்டுமன்றி, திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நடப்பாண்டு மா மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
மலை அடிவாரப் பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பெரும்பாலான மரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் பிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அதே வேளையில் இலைகள் மற்றும் பூக்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இது குறித்துச் சரந்தாங்கி பகுதியைச் சேர்ந்த விவசாயி புகழ் மணி கூறுகையில், “தற்போது மா மரங்களில் ‘விரியன்’ பூச்சி எனப்படும் ஒரு வகை புழுக்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இவை மா மரத்தின் தளிர் இலைகள் மற்றும் பூக்களைச் சேதப்படுத்துவதுடன், பிஞ்சுகளை முழுமையாகத் தின்று அழித்துவிடுகின்றன. பொதுவாக அதிக மழை பெய்தால் பூக்கள் கருகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் இந்தாண்டு கடும் பனிப்பொழிவு நிலவுவதால், பூச்சிகளின் பெருக்கம் ஜனவரி மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இதனைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக மருந்து தெளிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.
வழக்கமாக மா சாகுபடியில் 20 நாட்களுக்கு ஒருமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படும். ஆனால், தற்போது பூச்சிகளின் தீவிரம் அதிகமாக இருப்பதால், பல விவசாயிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு மற்றும் பூச்சித் தாக்குதலால் பூக்கள் உதிராமல் பாதுகாத்தால் மட்டுமே பிஞ்சுகள் நன்கு பிடித்து, வரும் கோடையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மருந்து தெளிப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், வெளிமாநில ஏற்றுமதியை நம்பியுள்ள விவசாயிகள் விளைச்சலைக் காக்கப் போராடி வருகின்றனர். தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்கினால் இந்தாண்டு மா விளைச்சலைச் சீராகப் பெற முடியும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.















