“2 நாட்களுக்கு முன்னர் தான் டை அடித்தேன்” – ஓய்வை பற்றி முதல் முறையாக பேசும் விராட் கோலி !

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலக அளவில் புகழ்பெற்ற வீரருமான விராட் கோலி, சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார். ஓய்வுக்குப் பிறகு இதுகுறித்து பொதுவெளியில் பேசாமல் இருந்த கோலி, தற்போது முதல் முறையாக தனது ஓய்வை குறித்து மனம் திறந்துள்ளார்.

யுவராஜ் சிங் அமைத்துள்ள YouWeCan அறக்கட்டளையின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோலி, “2 நாட்களுக்கு முன்னர் தான் என்னுடைய தாடிக்கு டை அடித்தேன். நீங்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை டை அடிக்க வேண்டிய நிலைக்கு வந்திருந்தால், ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறிதான் அது!” எனச் சிரித்துக்கொண்டே பகிர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் கெய்ல், ரவி சாஸ்திரி, பிரையன் லாரா, கெவின் பீட்டர்சன், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட கிரிக்கெட் துறையின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு முன்பாக, இந்திய அணியின் தற்போதைய வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பங்கேற்றனர்.

ரவி சாஸ்திரியின் பங்கு :

தனது டெஸ்ட் பயணத்தில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பங்களிப்பைப் பற்றி பெருமிதத்துடன் பேசிய கோலி,

“நேர்மையாகச் சொன்னால், ரவி சாஸ்திரியுடன் நான் பணியாற்றவில்லை என்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் என் பயணம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. அவர் எனக்கு முழுமையாக ஆதரவாக இருந்தார். பத்திரிகையாளர் சந்திப்புகளில் என்னை காப்பாற்ற முன் வந்தார். நாங்கள் இருவருக்குள் இருந்த புரிதல் மிகவும் விசேஷமானது. என் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களில் அவர் இருந்தது என் போகை மாற்றியது,” எனக் கூறினார்.

36 வயதான கோலி, தனது டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் நோக்கில் உள்ளார்.

Exit mobile version