உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் இடையிலான ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்றுப் போட்டி, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆட்டத்தை நேரில் காண்பதற்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா விம்பிள்டன் அரங்கில் பார்த்து ரசித்தனர். இவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் டி மினாரை தோற்கடித்து காலிறுதிக்குள் முன்னேறினார். விறுவிறுப்பான போட்டியின் போது, முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரும் அரங்கில் இருந்தார். ஜோகோவிச் வெற்றிப்பெறும் தருணங்களில், கேமரா அடிக்கடி பெடரரையும் காட்டியது.
போட்டிக்குப் பின், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த ஜோகோவிச், அவருக்கு நன்றி தெரிவித்தார்.
விராட் – அனுஷ்கா தம்பதியினர், 2015 ஆம் ஆண்டிலும் விம்பிள்டன் போட்டியை நேரில் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
