கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் மொழிப்போர் தியாகி அ. சிதம்பரநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பத்மநாபபுரம் சார் கலெக்டர் வினய்குமார் மீனா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குமரி மாவட்ட எல்லையோரப் பகுதியான களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மொழிப்போர் தியாகி அ. சிதம்பரநாதன் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. எல்லைப் போராட்டத்திலும், மொழிப் போராட்டத்திலும் முக்கியப் பங்காற்றிய அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு தினம் அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நடைபெற்ற நினைவு தின நிகழ்வின் போது, பத்மநாபபுரம் சார் கலெக்டர் வினய்குமார் மீனா கலந்துகொண்டு, சிதம்பரநாதன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தியாகியின் சேவைகளை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், விளவங்கோடு வட்டாட்சியர் வயோலா பாய், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் களியக்காவிளை பேரூராட்சித் தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் பெனட் ராஜ், பேரூராட்சி உறுப்பினர் ரிப்பாய், கிராம நிர்வாக அலுவலர் ஜீனா ஜாஸ்மின், வருவாய் அலுவலர் தேவிகா மற்றும் அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் திரளாகக் கலந்துகொண்டு தியாகிக்குத் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாக அமைந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

















