வீடுகளில் ஒவ்வொருவரும் தங்களின் சக்திக்கு ஏற்ப விநாயகர் வழிபாட்டை நடத்தலாம். வழக்கமாக கோலம் போட்ட மனையில் அச்சு மண் பிள்ளையாரை கொண்டு வந்து, மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.
பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் பூசி, எருக் கம்பூ மாலை, அருகம்புல் மாலை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னி பத்ரம், அருகம்புல் போன்றவற்றால் அர்ச்சனை செய்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் 21 வகையான இலைகளால் விநாயகர் அர்ச்சனை செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. அந்த இலைகளின் பெயர்கள் மற்றும் அவற்றால் கிடைக்கும் பலன்கள் பின்வருமாறு:
- முல்லை – அறம்
- கரிசலாங்கண்ணி – இல்வாழ்க்கைக்கு தேவையான பொருள்
- வில்வம் – இன்பம், விரும்பியவை அனைத்தும்
- அருகம்புல் – அனைத்து பாக்கியங்களும்
- இலந்தை – கல்வி
- ஊமத்தை – பெருந்தன்மை
- வன்னி – இவ்வுலகிலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள்
- நாயுருவி – முகப்பொலிவு, அழகு
- கண்டங்கத்திரி – வீரம்
- அரளி – வெற்றி
- எருக்கம் – கருவில் உள்ள சிசுவிற்கு பாதுகாப்பு
- மருதம் – குழந்தை பேறு
- விஷ்ணுக்ராந்தி – நுண்ணறிவு
- மாதுளை – பெரும் புகழ்
- தேவதாரு – எதையும் தாங்கும் இதயம்
- மருவு – இல்லற சுகம்
- அரசு – உயர் பதவி, மதிப்பு
- ஜாதி மல்லிகை – சொந்த வீடு, பூமி பாக்கியம்
- தாழம் இலை – செல்வச்செழிப்பு
- அகத்திக் கிரை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை
- தவனம் – நல்ல கணவன்-மனைவி அமைதி
இந்த 21 இலைகளைத் தவிர, நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை போன்ற இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம்.
அர்ச்சனைக்கு பின் பலவிதமான கனிகள், குறிப்பாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவைகள் நைவேத்யமாக சமர்ப்பிக்கப்படுகின்றன. அதோடு பாயாசம், வடை, அப்பம் ஆகியவை வழக்கமாக தயாரிக்கப்படுகின்றன. இதில் கொழுக்கட்டை, விநாயகரின் மிகவும் பிடித்த நைவேத்யமாகக் கருதப்படுகிறது.