குப்பனூரில் 6 யானைகளை கிராம மக்களே விரட்டினர்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குப்பனூர் பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த 6 யானைகள் கொண்ட கூட்டத்தை, வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே கிராம மக்களே ஒன்று கூடி, டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் கூட்டம் கூட்டமாக வருவதால், அப்பகுதி மக்கள் கூடுதல் பாதுகாப்புக் கோரி வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. கோடைகாலங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக இவை தொண்டாமுத்தூர் பகுதிகளுக்கு வெளியே வந்து விளைநிலங்களில் உணவு தேடுவது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில்,  தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பனூர் பகுதிக்குள் சுமார் 6 யானைகள் கொண்ட கூட்டம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். யானைகள் கூட்டம் மெல்ல மெல்ல குடியிருப்புப் பகுதிக்குள் தொடர்ந்து முன்னேறியதை அடுத்து, வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே பொதுமக்கள் ஒன்றுகூடினர்.

அவர்கள் தங்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் ஒலியைப் பயன்படுத்தி, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த முயற்சியால், அந்த யானைகள் கூட்டம் பயந்து, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை நோக்கி வேகமாக ஓடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. யானைகள் ஊருக்குள் வந்தபோது, வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில், அவரது தோட்ட வேலி, தண்ணீர் பாய்ச்சுவதற்கான உபகரணங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்தக் காட்டு யானை சேதத்திற்கு உண்டான இழப்பீட்டை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று வேலுச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய காலகட்டங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதிகளில் இருந்து வெளியே வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குப்பனூர் பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு வைத்துள்ள கோரிக்கைகள்: வனத்துறையினர் கூடுதலாகக் குழு அமைத்து, யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் வராதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊருக்குள் வரக்கூடிய யானைகளை விரைந்து வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் வனவிலங்கு – மனித மோதலைத் தவிர்க்க வனத்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Exit mobile version