கூகுள் மேப்ஸ் குழுவை திருடர்கள் என சந்தேகித்து தாக்கிய கிராம மக்கள் – பரபரப்புக்கு முற்றுப்புள்ளி !

கூகுள் மேப்ஸ் கணக்கெடுப்பு குழுவை திருடர்கள் என தவறாக நினைத்த கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கான்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவு, கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தில் தெருக்களை வரைபடமாக்கிக் கொண்டிருந்த குழுவினரை, சமீபத்திய திருட்டுச் சம்பவங்களால் எச்சரிக்கையுடன் இருந்த உள்ளூர்வாசிகள் சந்தேகித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் வாக்குவாதம் வெடித்தது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை சமாதானப்படுத்தினர். கூகுள் குழுவினரும், கிராம மக்களும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கூகுள் மேப்ஸ் குழுத் தலைவர் சந்தீப் விளக்கம் அளித்தபோது, “இது முற்றிலும் தவறான புரிதல். மத்திய மற்றும் மாநில அரசின் செல்லுபடியாகும் அனுமதிகளுடன் தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஆவணங்களைச் சரிபார்த்திருந்தால், எங்கள் நோக்கம் தெளிவாக புரிந்திருக்கும்” என்றார்.

இதுகுறித்து காவல் உதவி ஆணையர் (ஏசிபி) கிருஷ்ணகாந்த் யாதவ் தெரிவித்ததாவது:
“கிராமப்புறங்களில் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தும் போது, உள்ளூர் காவல்துறை அல்லது கிராமத் தலைவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது” என்றார்.

இந்நிலையில், கூகுள் குழுவினர் எந்தவிதமான புகாரும் பதிவு செய்யாமல், கிராம மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பிரச்சனை அமைதியாக தீர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவம், தகவல் தொடர்பின் குறைபாடு மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம், எவ்வளவு பெரிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கக் கூடுமென்பதை தெளிவாக உணர்த்துகிறது.

Exit mobile version