திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் அமைந்துள்ள சப்தகன்னிமார், விநாயகர், நாகம்மாள், கருப்புசாமி, வேட்டைக்கருப்பு, முனீஸ்வரன் ஆகிய கிராம தேவதைகள் கோயில், ஆலய பிரதிஷ்டை விழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிரதிஷ்டை விழாவில், பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட, புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டதுடன், விண்ணில் கருடன் வட்டமிட்ட காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த விழாவிற்காக, நாட்டின் பல்வேறு புனித தலங்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டன. அழகர்கோயில் நூபுரக்கங்கை, ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தம், அணைப்பட்டி, சுருளித் தீர்த்தம், கொடுமுடி, காசித் தீர்த்தம், மற்றும் மஞ்சளாறு காமாட்சியம்மன் கோயில், தீர்த்தங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த புனித தீர்த்தங்களைக்கொண்டு, வேத விற்பன்னர்களான விஸ்நாதன் மற்றும் நடராஜ முரளி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. இந்த யாகத்தில், சப்தகன்னிமார், விநாயகர் மற்றும் வேட்டை கருப்பு சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

யாகசாலை பூஜையின் நிறைவில், பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த கடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, வானத்தில் கருடன் வட்டமிட, தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த அரிய காட்சியைக்கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பூசாரி கோழிபாண்டி, மருதராஜ் செய்து இருந்தனர்.
இந்த கிராம தேவதை கோயில் பிரதிஷ்டை விழா, வத்தலக்குண்டு மற்றும், சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும், மக்களிடையே மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.