ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் அமைந்துள்ள பழமையான கருட ஸ்தம்ப ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆஞ்சநேயருக்கு 1008 வடைமாலை அணிவித்துச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த ஆன்மீகம் மற்றும் பக்தி மயமான சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.
வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சி: சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜயமங்கலத்தில் நடைபெற்ற த.வெ.க. மாநாடு எவ்வித இடையூறுமின்றி நல்லபடியாக நடந்து முடிந்தது. இதற்காக நான் ஆஞ்சநேயரிடம் வேண்டியிருந்தேன். அந்த வேண்டுதல் நிறைவேறியதால் இன்று நன்றி கடன் செலுத்த வந்துள்ளேன்” என்றார். மேலும், “நான் மறைந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குச் செங்கோல் வழங்கினேன், அவர்கள் கோட்டையில் அமர்ந்தார்கள். அதேபோல் தற்பொழுது தளபதி விஜய்க்கும் செங்கோல் வழங்கியுள்ளேன், அவர் முதலமைச்சராவது உறுதி” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அரசியல் பதிலடி: செய்தியாளர்கள் அவரிடம், “பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் த.வெ.க-வை திமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், “நயினார் நாகேந்திரன் தான் திமுகவிற்கு ‘பி’ டீம் ஆகச் செயல்படுகிறார்” என்று அதிரடியாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார்.
விஜயமங்கல மாநாட்டின் வெற்றிக்குப் பிறகு த.வெ.க நிர்வாகிகளின் இத்தகைய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சத்தியமங்கலம் கோவில் த.வெ.க தொண்டர்கள் திரளாகக் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
















