தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அண்ணாதுரை பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் “மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம்” துவக்க உள்ளார்.
முதல் கட்டமாக 100 சட்டசபைத் தொகுதிகளில் விஜய் மக்கள் சந்திக்கவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்கான விரிவான திட்டம், அவரது அரசியல் ஆலோசனைக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. விஜயின் பயணம் முதலில் டெல்டா மாவட்டங்களில் — திருச்சி அல்லது நாகப்பட்டினத்தில் தொடங்கப்பட உள்ளது.
பாதுகாப்பு ஆலோசனை
மக்கள் சந்திப்பு பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விஜய் தரப்பு, மத்திய மண்டல போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
ஹோட்டல்களின் தயக்கம்
விஜய் தங்கும் விடுதிகளைப் பொறுத்தவரை சிக்கல் எழுந்துள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில் விஜய் தங்கினால், அவரை காண பொதுமக்கள் பெருமளவில் கூடும் சூழல் ஏற்படும். இதனால் போலீசாருக்கு கட்டுப்பாடு சிரமமாகும்; ஹோட்டல் மற்றும் பிற விருந்தினர்களுக்கும் நெருக்கடி ஏற்படும் என்பதால், பல ஹோட்டல்கள் அறை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன என்று த.வெ.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கரவேனில் தங்கும் திட்டம்
இதனை முன்னிட்டு, ஹோட்டலில் தங்க முடியாத நிலை ஏற்பட்டால், விஜய் கரவேனில் தங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ‘லிப்ட்’ உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரோடு ஷோ & பொதுக்கூட்டம்
மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த உள்ளார். அப்போது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத் தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தி, விஜய் உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
