கரூர் பொது கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, தனது பிரச்சாரத் திட்டங்களை சிலகாலம் நிறுத்தி வைத்திருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மீண்டும் பொதுக்கூட்டப் பிரச்சாரத்தை தொடங்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற த.வெ.க. சிறப்புப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், “என்னுடைய அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும்” என்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல நிர்வாகிகள் “சேலத்திலிருந்து பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்” என விஜயிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
சேலம் மாநகர காவல் ஆணையரிடம், டிசம்பர் 4-ஆம் தேதி பிரச்சாரக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதற்காக போஸ் வளாகம், கோட்டை வளாகம் உள்ளிட்ட பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி கிடைத்தவுடன், மேடை அமைப்பு, பாதுகாப்பு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தேவையான கூடுதல் ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளை கட்சி நிர்வாகிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் துயரத்தைத் தொடர்ந்து, மீண்டும் பிரச்சார மேடைக்கு விஜய் வருவது குறித்து அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகம் காட்டி வருகிறார்கள்.
