சென்னை: நாகப்பட்டினம் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
நாகையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு மருத்துவர்கள் இல்லை, பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை, ரயில் நிலையத்தில் பணிகள் தாமதமாக உள்ளன என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “விஜயின் பேச்சு யாரோ எழுதிக் கொடுத்ததைப் போல உள்ளது. நாகை அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இல்லை. ஆனால் நாகூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதால், 500 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட வசதியுடன் மகப்பேறு பிரிவு செயல்படுகிறது. விஜய் அல்லது அவரது கட்சியினர் நேரில் சென்று பார்த்துவிடலாம்” என்றார்.
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனை குறித்து அன்புமணி பேசினார் என்ற கேள்விக்கு, “அங்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட புதிய மருத்துவமனை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. மருத்துவமனைக்கு பூட்டுப் போடுவோம் என்று சொல்வது தவறான புரிதல்” என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

















