தமிழக அரசியல் களத்தில் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றி கழகத்தின்’ தலைவர் விஜய், கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய ‘மதுரை புறநகர் கிழக்கு’ மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகளை அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் களப்பணிகளை மேலும் செம்மைப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் மாவட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரிந்துரையின் பேரில், திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீராங்கனை உள்ளிட்ட 15 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமன விழாவில் மிக முக்கிய நிகழ்வாக, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் தேசிய வீராங்கனையான மாற்றுத்திறனாளிப் பெண் எஸ். பாத்திமா பீவி, மாவட்டத் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பணி நியமன ஆணையை வழங்கிய தலைவர் விஜய், எவ்வித பகட்டும் இன்றி பாத்திமா பீவி அமர்ந்திருந்த நிலைக்கு இணையாகத் தானும் தரையில் மண்டியிட்டு அமர்ந்து ஆணையை வழங்கினார். மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அவர் அளித்த இந்த உயரிய மரியாதையும், எளிமையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், கட்சியின் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையில் தேசத்திற்குப் பெருமை சேர்த்த ஒரு வீராங்கனையை அரசியல் அதிகாரத்தில் அமர வைத்தது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த புதிய மாவட்டக் கழகத்தின் செயலாளராக மருதுபாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டக் கழக இணைச் செயலாளராக மதன், மாவட்டப் பொருளாளராகப் பஞ்சு, மாவட்டத் துணைச் செயலாளர்களாக நவீன் மற்றும் எஸ். பாத்திமா பீவி ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இது தவிர, கட்சியின் கொள்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல செயற்குழு உறுப்பினர்களாகப் பிரிஷிலா, மீனா, கௌதம் விக்னேஷ், முகமது ரியாஸ், கார்த்திகேயன், கௌதம், ஸ்ரீராம், கூடலிங்கம் (எ) கார்த்திக், எஸ். ரவி, வெற்றிவேல் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைவர் விஜய் தனித்தனியாக வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு மக்கள் நலப்பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த நியமனம் மூலம் திருப்பரங்குன்றம் பகுதியில் கட்சி புதிய உத்வேகம் பெற்றுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜய்யின் அரசியல் நகர்வு மற்ற கட்சிகளிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

















