சென்னை: எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் மேம்பட்ட ஆராய்ச்சி மைய தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் பார்த்திபன். விழா முடிந்ததும் ஊடகங்களிடம் பேசிய அவர், நடிகர்கள் அஜித் மற்றும் விஜயைச் சேர்ந்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அஜித் சமீபத்தில் பேட்டியில், “முதல் நாள் முதல் காட்சிக்கு வரவேற்பு தேவையில்லை” என்று கூறியிருந்தார். இதுகுறித்து கேட்டபோது பார்த்திபன் கூறியதாவது:
“முதல் நாள் முதல் காட்சிதான் ஒரு நடிகரின் ஸ்டார்ட்டத்தை நிர்ணயிக்கிறது. அஜித் எப்போதும் வேறு உயரத்தில், வேறு பார்வையில் இருக்கிறார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருவருக்கு ஐந்து வருட ஆட்சி வாய்ப்பு கொடுத்திருந்தால், அதை முழுமையாக முடிக்கட்டும்; அதில் உடன்பாடு இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் காட்டலாம் என்ற அவரது கருத்து நன்றாக இருந்தது.
திரையரங்கில் முதல் நாள் சீட்டை கிழிப்பது, அபிஷேகம் செய்வது போன்ற நிகழ்வுகள் காரணமாக கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் நடந்துள்ளன. இனி அப்படி நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் அவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரின் பார்வைக்கும் மரியாதை இருக்க வேண்டும்; அதுபோல அவரின் பார்வைக்கும் மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.”
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அஜித் பேட்டியில் “ஒருவர் மட்டும் காரணம் இல்லை” என்று கூறியதையும் பற்றி பார்த்திபன் கருத்து தெரிவித்தார்:
“விஜய் மட்டும் பொறுப்பேற்க முடியாது. நாம் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். 41 உயிர்கள் திரும்ப கிடைக்காது; எனவே மறுபடியும் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்,” என்றார்.
விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களையே அழைத்து வந்து ஆறுதல் கூறியதைக் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:
“நான் இருந்தால் நேரில்போயிருப்பேன் என்று யோசிக்கலாம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமா? மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் இருந்திருக்கலாம். விஜய் அவருக்கு சரி என்று தோன்றியதைச் செய்துள்ளார். அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அதுவே முக்கியம்,” என்றார்.
