நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ திரைப்படத்தின் வெளியீட்டை தடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளை முற்றுகையிடப் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, ‘கிங்டம்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம், திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி டி. பரத் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் போலீசார், பாதுகாப்பு கோரிய மனு முழுமையாக கிடைக்கவில்லை எனவும், விளக்கம் அளிக்க அவகாசம் தேவை எனவும் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கறிஞர் சங்கர், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தரப்புவாதம் மேற்கொண்டார். அதில், “தமிழீழம் தொடர்பான தர்க்கக்கேடான காட்சிகள் உள்ளதால், படம் எதிர்ப்பு எழுப்பும் நோக்கில் விளம்பரத்திற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்றும், “நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் எந்தவிதமான பதற்றம் ஏற்பட்டதில்லை” என்றும் கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சென்சார் போர்டு அனுமதி அளித்த படத்தை தடுக்க முடியாது. கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடையாளம். யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. மாற்றுக் கருத்துகள் உள்ளதாகக் கூறி ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய முடியாது. வேண்டுமானால் சட்டப்படி சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம் அல்லது படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம்” எனக் கூறினார்.
இதையடுத்து, காவல்துறையும், நாம் தமிழர் கட்சியும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை நாளை தொடர்ந்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.















