நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை 21ம் தேதி, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் ராஜ்ய சபாவை நடத்தியபோது, அதே நாளே திடீரென பதவி விலகுவதாக அறிவித்தார். பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அனுப்பியதாகத் தகவல் வெளியாகியது.
ராஜினாமாவின் பின்னணி குறித்து அவர், “மருத்துவ காரணங்களால் பதவி விலகுவதாக” குறிப்பிட்டிருந்தார். ஜக்தீப் தன்கர், 2022ம் ஆண்டு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி தேர்தல் தொடர்பான முக்கிய நாட்கள் வருமாறு:
தேர்தல் அறிவிப்பு நாள் – ஆகஸ்ட் 7
வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் – ஆகஸ்ட் 21
வேட்புமனு பரிசீலனை நாள் – ஆகஸ்ட் 22
வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் – ஆகஸ்ட் 25
தேர்தல் தேதி – செப்டம்பர் 9
அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடைபெறும். அதே நாளின் மாலை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.